Sunday, March 17, 2013

தாழ்த்தப்பட்டோர் வரலாறு - 1



உலக வரலாற்றில் வளர்ந்து நிற்கும் எந்த ஒரு நாட்டிலும் அந்நாட்டின் உயர்விற்கும், சிறப்பிற்கும் ஊன்றுகோலாய் விளங்கிய பூர்வ குடிமக்கள் புறந்தள்ளப்பட்டு அரசியல், சமூக, கலாச்சார ரீதியில் அவர்கள் ஒதுக்கப்பட்டு இரண்டாந்தர குடிகளாக மாற்றப்பட்டுள்ள நிலைமைகள் தான் நிகழ்ந்துள்ளன. உதாரணம் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலையில் உள்ள அமெரிக்காவையும், ஜப்பானையும் எடுத்துக்கொள்ளலாம். கொலம்பஸ் கால் வைத்த 500வது ஆண்டை கொண்டாடிய அமெரிக்க, தங்கள் நாட்டின் பூர்வ குடிகளான செவ்விந்தியர் தங்கள் வளங்களையும், சுதந்திரத்தையும் இழந்து எங்கோ ஒதுங்கிக் கிடப்பதை மறந்து விட்டது.

ஜப்பான் நாட்டு வளர்ச்சிக்கு ஊன்றுகோல் போல் வாழ்ந்திட்ட "புராக்கு" இனத்தினர் இந்தியாவின் தீண்டத்தகாதவர்களை போல தங்கள் உரிமைகளையும், நிலைகளையும் இழந்து காட்டு பகுதிகளில் புறந்தள்ளப்பட்டுள்ளனர். இதுவே தான் இன்றைய இந்தியாவின் நிலை. இந்த நாட்டின் தொன்மை வாழ்ந்த நாகரீகத்திற்கும், வளமைக்கும் வித்திட்ட பூர்வ குடிகளான; மண்ணின் மைந்தர்களான தாழ்த்தப்பட்ட  ஆதி திராவிட (தலித்) மக்கள் சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆட்படுத்தப்பட்டு, கொடுமையாக நடத்தப்பட்டு, தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வரலாறும், பண்பாடும், புகழும் மறைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட ஆதி திராவிட (தலித்) மக்களின் பூர்வீகம் மற்றும் வரலாற்றை இனி காண்போம்.

அதற்கு முன் பொதுவாக தாழ்த்தப்பட்டவர்கள் (இது நம் நாட்டில் உள்ள ஜாதியை குறிப்பிடவில்லை) எப்படி உருவாகி இருப்பார்கள் என்பதை அறிய ஒரு சிறிய கற்பனை கதைக்கு செல்வோம். கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் குறிப்பிட்டுள்ள முதல் மனிதர்களான ஆதாம், ஏவாள் அவர்களின் முதல் இரு புதல்வர்கள் காயீன் மற்றும் ஆபேல். இவர்களில் ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனாக இருக்கிறான். காயீன் நிலத்தை பயிரிடுபவனாக இருக்கிறான். இவர்கள் இருவரும் தங்களுடைய விளைச்சலின் காணிக்கையை ஆண்டவருக்கென்று படைக்கிறார்கள் அதில் ஆபேல் அவர் மேய்த்த ஆடுகளின் கொழுமையான சிலவற்றை படைக்கிறார். காயீன் தன்னுடைய பயிரில் கிடைத்த விளைச்சலை காணிக்கையாக படைக்கிறார்.  ஆபேலின் காணிக்கையை ஆண்டவர் அங்கீகரிக்கிறார். காயீனின் காணிக்கையை ஆண்டவர் நிராகரிக்கிறார். இதற்கு பல காரணங்களை பாதிரிமார்கள் கூறுகிறார்கள். ஆபேல் நிறைவாகவும் காயீன் குறைவாகவும் காணிக்கை கொடுத்ததாக சிலரும், ஆபேல் ஆட்டின் உண்மையான கொழுமைகளை கொடுத்ததாகவும் காயீன் தன்னுடைய விளைச்சலில் கரிக்க நெல் எனப்படும் உபயோகப்படாத ஒன்றை கொடுத்ததாக சிலரும், இன்னும் ஒரு சிலர் அந்த காலத்தில் கால்நடைகளின் விளைச்சலையே ஆண்டவர் விரும்பினார் எனவும், நாகரீகமடைந்த விவசாய விளைச்சலை அவர் விரும்பவில்லை எனவும் அதனாலேயே ஆபேலின் காணிக்கையை ஆண்டவர் நிராகரித்ததாகவும் கூறுகின்றனர். பின்னர் காயீன் ஆபேலை கொன்றுவிடுகிறான். சரி இங்கு ஆண்டவரிடம் ஆசிர்வாதத்தை பெற்றவன் ஆபேல், ஆசீர்வாதம் பெறாதவன் காயீன். ஒருவேளை ஆபேல் காயீனால் கொல்லப்படாமல் இருந்திருந்தால் அவர்கள் இருவரது தலைமுறைகளிலும்  ஆபேலின் தலைமுறையே ஆண்டவரின் ஆசிர்வாதத்தோடு சகல நன்மைகளோடும் இருந்திருக்கும், ஆண்டவரின் ஆசீர்வாதம் பெறாத காயீனின் தலைமுறை ஆபேலைக்காட்டிலும் தாழ்ந்ததாகவே இருந்திருக்கும். ஆசீர்வாதம் பெற்ற ஆபேலின் தலைமுறை காயீனின் தலைமுறையை ஆண்டுக்கொண்டிருக்கும். இப்படித்தான் முதல் தாழ்த்தப்பட்டவன் உலகத்தில் உருவாகிறான். இந்த கற்பனை கதைக்கும் இன்று இந்தியாவில் இருக்கும்   தாழ்த்தப்பட்டோருக்கும்  எந்த  சம்பந்தமும்  இல்லை.              அவர்கள் எவ்வாறு வந்தேறிகளால் தாழ்த்தப்பட்டனர் என்பதை பின்னர் காண்போம்.

மற்றுமொரு குட்டி கற்பனை கதையுடன் இந்த பதிவை முடித்துக்கொள்கிறேன், ஒரு தம்பதியருக்கு இரண்டு மகன்கள் ஒருவன் ஏமாளி மற்றொருவன் ஏமாற்றுக்காரன். அண்ணன் தம்பியாகிய இருவருக்கும்  எந்த ஒரு தின்பண்டமாக இருந்தாலும் சமமாக கொடுப்பார்கள் அவர்கள் பெற்றோர். இதில் தம்பியானவன் தன்னுடைய தின்பண்டத்தை விரைவில் சாப்பிட்டுவிட்டு அண்ணனிடம் பங்கு கேட்பான். அண்ணனும் தம்பியின் மீதுள்ள பாசத்தால் அவனுக்கு தன்னிடமிருந்து கொஞ்சம் தின்பண்டத்தை கொடுப்பான். சின்ன வயதில் அண்ணனிடம் ஏமாற்றி தின்ற தம்பியின் ஏமாற்று வித்தை பெரியவனாக வளரும் வரை தொடர்கிறது. ஒரு நேரத்தில் அண்ணனின் சொத்துக்களை கூட வஞ்சகத்தனத்தால் தம்பியானவன் பறிக்கிறான். ஏமாற்றி பறித்த சொத்துக்களுடன் தன்னுடைய சொத்துக்களையும் சேர்த்து தானும் தன்னுடைய பிள்ளைகளுடன் செல்வச்செழிப்போடு வாழ்கிறான். ஏமாளியாகிய அண்ணன் தனக்கு மீதமுள்ள சொத்துக்களுடன் கஷ்டத்துடனேயே தன்னுடைய பிள்ளைகளுடன் வாழ்க்கையை நடத்துகிறான். ஒரு நேரத்தில் தன்னுடைய குடும்ப கஷ்டத்தின் காரணமாக தன்  தம்பியின் பண்ணையிலும், வயலிலும் வேலை செய்து பிழைக்கவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு அவர்களுடைய குடும்பம் தள்ளப்படுகிறது. தம்பி எஜமானாகவும் அண்ணன் தொழிலாளியாகவும் மாறுகிறார்கள். இப்படி தம்பியின் வம்சவாளியினர் அண்ணனின் வம்சாவாளினரை தங்களை விட தாழ்ந்தவர்கள் என்று கருதி அடக்கி ஆட்சி செய்கின்றனர். தம்பி குடும்பத்தினரின் பார்வையில்  அண்ணனின் குடும்பத்தினர் தாழ்த்தப்பட்டவர்கள் ஆகின்றனர்.

(தொடரும்...)

No comments:

Post a Comment