Friday, March 22, 2013

தாழ்த்தப்பட்டோர் வரலாறு - 2


சென்ற பதிவில் தாழ்த்தப்பட்டவர்கள் எவ்வாறு உருவாகிறார்கள் அல்லது உருவாக்கப்படுகிறார்கள் என்று பார்த்தோம். சரி இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாறு மற்றும் பூர்வீகம் பற்றி இனி காண்போம். 

சிந்து-சமவெளி நாகரீகம்:


கி.மு.3500 ஆண்டுகளில் சிந்து நதிக்கரையில் வளர்ந்த சிந்து சமவெளி நாகரீகம், உலகின் தலைசிறந்த நாகரீகங்களில் ஒன்றாக திகழ்ந்தது. நன்கு திட்டமிடப்பட்ட நகர வாழ்வை கொண்ட உயர்ந்த நாகரீகமாக அது விளங்கி வந்துள்ளது. ஆரியர்கள் வருகைக்கு முன்பு இந்நாட்டின் ஆதி மக்களான திராவிடர்களின் நாகரீகமாக அது குறிப்பிடப்படுகிறது. மற்ற மனித கூட்டங்கள் நாடோடிகளாகவும், காட்டுமிராண்டிகளாகவும் வாழ்ந்து வந்த அந்த காலகட்டத்தில் சிந்து சமவெளியில் வாழ்ந்த திராவிடர்கள், நகர நாகரீகத்தை கொண்டு வாழ்ந்து வந்தனர். அனைத்து வசதிகளுடன் கூடிய குடியிருப்பு வீடுகள்பருத்தி-கம்பளியாலான உடைகள்; தங்கம், வெள்ளி, தாமிரம் உலோகங்களால் விலையுயர்ந்த அனைத்து வகையான அணிகலன்களையும் முத்து, மாணிக்கம், பவழம் போன்றவைகளை ஆபரணங்களில் பதித்து அணிந்து வந்தனர்.

மண்பாண்டங்கள், பீங்கான் பாத்திரங்களை பயன்படுத்தினர். வனவிலங்குகள் பதித்த இலச்சினையும் நாணயங்களில் பதித்து வைத்திருந்தனர். இந்தியாவின் பிற பகுதிகளோடும், ஆசியாவின் பல பகுதிகளோடும் வணிக தொடர்பு கொண்டிருந்தனர். நிலத்தை உழுது பயிரிட்டு கோதுமை, பார்லி, பருத்தி போன்ற பயிர்களை பயிரிட்டனர். குயவர், நெசவாளர், தச்சர், கொத்தனார், கொல்லர், பொற்கொல்லர், கல்லுடைப்போர் போன்றோரும் தங்கள் தொழிலை செய்து வந்தனர்.

பெண்தெய்வ வழிபாடு, இயற்கை தெய்வங்களான நாக வழிபாடு-மர வழிபாடு-விலங்கின வழிபாடு போன்ற வழிபாட்டு முறைகள் அவர்களிடையே காணப்பட்டது. இப்படிப்பட்ட சிறப்பு வாழ்ந்த சிந்து சமவெளி நாகரீகம் உலகின் மிக சிறந்த நாகரீகங்களான சுமேரியா-மெசபடோமியா நாகரீகங்களுடன் இணைத்து பார்க்கக்கூடிய ஒரு நாகரீகமாகும். 

ஆரியர் நாகரீகம்:


சிந்து சமவெளி நாகரீகத்தை தொடர்ந்து ஆரியர் நாகரீகம் வளர்ந்தது. இது கி.மு.1500களில் சிந்து நதிக்கரையில் பரவியது. திராவிடர்களின் வீழ்ச்சியே ஆரியர்களின் வளர்ச்சியாக கருதப்படுகிறது. ஆரிய நாகரீகம் திராவிட நாகரீகத்திலிருந்து முழுதும் மாறுபட்டிருந்தது. இவர்கள் நாடோடிகளாக இருந்து  பிறகு கிராம வாழ்க்கையே வாழ்ந்து வந்தனர். குதிரைகளின் பயனை உணர்ந்து அதன் மூலம் போரிடுவதில் சிறந்து விளங்கினர். ஒரே நேரத்தில் அவர்களுடைய குடியிருப்புகள் அமையவில்லை. பற்பல குழுக்களாக பல்வேறு காலக்கட்டங்களில் அவர்களின் குடியேற்றங்கள் அமைந்திருந்தன. ஆரிய நாகரீகம், ரிக், யஜூர், சாம, அதர்வண என்ற நான்கு வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் போன்றவற்றை இயற்றி இந்திய சமுதாயத்தை ஒரு மத ரீதியிலான சமுதாயமாக மாற்றி அமைத்து, மக்களிடம் இருந்த தொழிற் பிரிவுகளை மதத்தை முன் வைத்து; நிரந்தர ஜாதி பிரிவுகளாக மாற்றியமைத்தது. படைப்பு கடவுளான புருஷா அல்லது பிரம்மாவின்  முகத்தில் (நெற்றி) பிறந்தவன் பார்ப்பணன் என்றும்;தோளில் பிறந்தவன் ஷத்ரியன் என்றும், தொடையில் பிறந்தவன் வைஷ்யன் என்றும்;பாதத்தில் பிறந்தவன் சூத்திரன் என்றும் சதுர் வர்ண முறையை வகுத்து மனுவின் மூலம் [ஆரியர்களின் சமய சட்டங்களை தயாரித்தவன்] அதற்கு புனிதத் தன்மையையும் சட்ட அந்தஸ்தையும் கொடுத்து, மீறுபவர்களுக்கு தண்டனையும் அளித்து இந்த மக்கள் பிரிவினையை நிரந்தரமாக்கியது. இந்த பிரிவுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அவர்ணர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் மாற்றப்பட்டனர்.

(தொடரும்...)

தாழ்த்தப்பட்டோர் வரலாறு - 1



No comments:

Post a Comment